சபரிமலையில் அனைத்து வயது பெண்கள் தரிசனத்துக்கு எதிர்ப்பு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

TOP-4 இந்தியா முக்கிய செய்தி

புதுடெல்லி, நவ.14: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருப்பதால் இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டது. இதனால் ஏற்கனவே அனைத்து வயது பெண்களுக்கும் வழங்கப்பட்ட அனுமதி தொடர்ந்து நீடிக்கிறது. கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்ற நிலை காலம் காலமாக நீடித்து வந்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில், சபரிமலையில் எல்லா வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. 4 நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கினர். அமர்வில் இடம் பெற்றிருந்த ஒரே ஒரு பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு இந்து அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. கடந்த ஆண்டு ஐயப்பன் கோயிலில் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நாயர் சர்வீஸ் சொசைட்டி, திருவாங்கூர் தேவஸ்தான வாரியம், சபரிமலை தந்திரி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் 56 மறு சீராய்வு மனுக்கள், 4 ‘ரிட்’ மனுக்கள் மற்றும் 5 இடமாற்ற மனுக்கள் என மொத்தம் 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தையும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. பிப்ரவரியில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று காலை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. இதில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ஏ.எம்.கன்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகிய 3 நீதிபதிகள் இந்த வழக்கை இன்னும் விரிவாக விசாரிக்க வேண்டும் என்பதால் இதை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தனர். மற்ற இரு நீதிபதிகள் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். இதையடுத்து பெண்கள் அனுமதிக்கான முந்தைய தீர்ப்புக்கு தடையில்லை என்றும். பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமின்றி வேறு கோவில்களிலும், மசூதிகளிலும் உள்ளது என்பதால் மதம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நீண்ட ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.

மற்ற மதங்களில் கடைபிடிக்கப்படும் வழிமுறைகள் குறித்து இந்து அமைப்புகளின் மனுதாரர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மத வழிபாடு, நம்பிக்கை என்ற பெயரில் பாகுபாடு கூடாது. கோவில், மசூதி, தேவாலயம் என எந்த மதத்தினராக இருந்தாலும், அவர்களது வழிபாட்டு உரிமையை பறிக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சபரிமலை விவகாரத்தை விசாரிக்க ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட உள்ளது.