புதுடெல்லி, நவ.14: தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது. கர்நாடகா மாநிலம் சென்னகேசவா மலையில் தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகிறது. அங்கிருந்து ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டம் வழியாக 432 கி.மீ தூரம் பயணித்து கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இங்கு தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லையை ஒட்டி கர்நாடக அரசு புதிய அணை கட்ட திட்டமிட்டு, அதற்கான ஆய்வு பணிகளை தொடங்கியது. இதையடுத்து, கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தென்பெண்ணை ஆற்றில் தங்களின் ஒப்புதல் இல்லாமல் கட்டுமானப் பணிகள், ஆய்வுகள் உள்ளிட்ட எவ்வித பணிகளும் மேற்கொள்ளக் கூடாது. தமிழகத்திலும் தென்பெண்ணையாறு ஓடுவதால் கர்நாடக அரசு முழு உரிமை கோர முடியாது என்று தமிழக அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், மேற்கூறிய வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட தடையில்லை எனக்கூறி தமிழக அரசு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.