சென்னை, நவ.14: உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் மாவட்ட கட்சி அலுவலகத்தில் மனுக்களை பெற்று வரும் 25ம்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில். கூறியிருப்பதாவது:- உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் கட்சி நிர்வாகிகளாகவும் அடிப்படை உறுப்பினர்களாகவும் இருக்கவேண்டும். நாளை வெள்ளிக்கிழமை காலை 10மணியிலிருந்து அந்தந்த மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்று வரும் 25ம்தேதி மாலை 5மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை ஒப்படைக்கவேண்டும்.

மாநகராட்சி மேயர் பதவிக்கு கட்டணத்தொகை ரூ. 15 ஆயிரம். மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ. 4 ஆயிரம். நகராட்சிதலைவர் பதவிக்கு ரூ. 7 ஆயிரம். நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ. 1500, பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு ரூ. 4 ஆயிரம், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ. 1000, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு ரூ. 4 ஆயிரம்,ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு ரூ. 2 ஆயிரம் என கட்டணம்நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.