பெங்களூரு, நவ.14: நிலவில் தரையிறங்குவதற்காக சந்திரயான் 3 திட்டத்தை தயாரிப்பதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஆண்டு நவம்பருக்குள் இதை செயல்படுத்த திட்டமிட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
சந்திரயான் 2 திட்டத்தின் கீழ் நிலவுக்கு அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது கோளாறு ஏற்பட்டது. கடந்த செப்டம்பரில் ஏற்பட்ட இந்நிகழ்வுக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆராய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் அடுத்த திட்டத்தின் கீழ் நிலவுக்கு அனுப்பப்படும் லேண்டர் சாதனத்தின் கால்களை வலுவாக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தரையிறங்கும் போது லேண்டரின் கால்கள் வலுவாக இருந்தால் அதிவேகத்தையும் தாங்கும் திறன் படைத்ததாக இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை. இந்த அடிப்படையில் நிலவுக்கு சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
2020 நவம்பருக்குள் இதை செயல்படுத்துவதற்காக பல்வேறு குழுக்களை இஸ்ரோ அமைத்துள்ளது. மேற்பார்வை குழு, மூன்று துணைக்குழுகளில் இடம்பெற்றுள்ள விஞ்ஞானிகள் ஆய்வு பணியை தொடங்கியிருக்கிறார்கள். அடுத்த ஆண்டு நவம்பரில் சந்திரயான் 3 ஏவப்படவேண்டும் என்பதில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் உறுதியாக இருக்கிறார் என விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.