மாணவியின் தந்தை முதல்வருடன் சந்திப்பு போராட்டம் நடத்திய திமுக, காங்., கட்சியினர் கைது

TOP-2 சென்னை முக்கிய செய்தி

சென்னை, நவ.15: ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இன்று சென்னைக்கு வந்த அவரது தந்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு அளித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய சுதர்சன் மற்றும் 3 பேராசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தக்கோரி ஐஐடி வளாகம்முன் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஐஐடியில் கேரளா மாநிலம், கொல்லம், கிளிகொல்லூர் கிராமத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் (வயது 18) என்ற மாணவி எம்.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். ஐஐடி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி படித்துவந்த இவர், கடந்த சனிக்கிழமை விடுதியில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் தனது மகளின் தற்கொலையில் மர்மம் உள்ளதாகவும், உரிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் கேரளா முதல்வரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.

இந்த வழக்கு இரண்டு மாநில விவகாரமாக மாறியுள்ளதால், தமிழக முதல்வரும் மாணவி தற்கொலை விவகாரம் குறித்து முழுமையாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும் படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு உத்தரவிட்டார். இதனிடையே,மாணவியின் செல்போன் நோட்ஸ் பகுதியில் தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் எழுதி வைத்திருந்தது தெரிந்தது. ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் கொடுத்த நெருக்கடியே தற்கொலைக்கு காரணம் என அதில் இருந்தது. மேலும் 4 பேராசிரியர்களின் பெயரும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே, இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி, பேராசிரியர் சுதர்சன் மற்றும் 3 பேராசிரியர்களிடம் இன்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், சென்னை வந்துள்ள பாத்திமாவின் தந்தையிடம், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்துவிட்டு, பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதாக அவர் பதிலளித்தார். இதனிடையே, மாணவியின் தற்கொலைக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி சென்னை ஐஐடி வளாகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாணவர் அணி மற்றும் தமிழக மாணவர் காங்கிரசார் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.