சென்னை, நவ.15: தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் அதிமுக சார்பில் இன்று முதல் விருப்ப மனு பெறப்பட்டது. சென்னையில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகிற டிசம்பர் மாதத்தில் நடைபெறலாம் எனவும், இதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, தேமுதிக, பிஜேபி உள்ளிட்ட கட்சிகளுடன் உள்ளாட்சி தேர்தல் ஒதுக்கீடு தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து அதிமுக, திமுக, பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் விருப்ப மனு பெறப்படும் என அறிவித்துள்ளன.

அந்தந்த மாவட்டங்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் மாவட்டங்களில் விருப்ப மனு அளிக்க அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த விருப்ப மனுக்களை பெற பொறுப்பாளர்களையும் அதிமுக தலைமை நியமித்துள்ளது. தென் சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் ராயப்பேட்டை ஹேமமாலினி திருமண மண்டபத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதில் தலைமைக்கழக நிர்வாகிகள் பொன்னையன், கோகுல இந்திரா, பாண்டுரங்கன், மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா எம்எல்ஏ மற்றும் கோவை சத்யன், டி.சிவராஜ், டி.ரமேஷ் ஆகியோரும் மனுக்களை பெற்றனர்.

மகளிர் நிர்வாகிகள் கற்பகம், ஜோஸ்மின், ஸ்ரீவித்யா, நிர்வாகிகள் புஷ்பாநகர் ஆறுமுகம், இளையமாறன், நுங்கை மனோகர் உள்ளிட்ட ஏராளமானோர் விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர். அதே போல் தென் சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் விருகம்பாக்கம் ராதா ஹாலில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதில் தலைமை கழக நிர்வாகிகள் மைத்ரேயன், ஆதிராஜாராம்,மூவேந்தன், மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி எம்எல்ஏ மற்றும் முன்னாள் எம்பி ஜெயவர்தன் ஆகியோரும் விருப்ப மனுக்களை பெற்றனர். வேளச்சேரி பகுதி செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வமுடன் விருப்ப மனு அளித்தனர். மேலும் வடசென்னை வடக்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் டி.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் பாலகங்கா ஆகியோரும் நிர்வாகிகளிடமிருந்து விருப்ப மனுக்களை பெற்றனர்.