இந்தூர், நவ.15: வங்கதேசத்துக்கு எதிரான தனது முதல் இன்னிங்ஸை விளையாடிவரும் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. மயங்க் அகர்வால் சதம் விளாசியும், ரஹானே அரைசதம் கடந்தும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்தியா-வங்கதேசம் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி, மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, தனது முதல் இன்னிங்ஸில் 58.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்திய தரப்பில், ஷமி 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 6 ரன்களில், அவுட் ஆகி அதிர்ச்சியளித்தாலும், மற்றொரு தொடக்க வீரர் மயங்க் அகர்வாலுடன், புஜாரா இணைந்து நல்லதொரு பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அதன்படி, முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எடுத்திருந்தது. புஜாரா 43 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பாக ஆடிய புஜாரா (54) அரைசதம் கடந்து அவுட்டானார். அடுத்துவந்த கேப்டன் விராட் கோலி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில், எல்.பி.டபிள்யூ. முறையில் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் நிதானமாக ஆடிவரும் மயங்க் அகர்வால்-ரஹானே ஜோடி ரன் குவிப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்டு விளையாடியது. மயங்க் அகர்வால் சதம் விளாசியும் (118), ரஹானே (53) அரைசதம் கடந்தும் சிறப்பான அதே சமயத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.

அதன்படி, 1.15 மணிநேர நிலவரப்படி இந்திய அணி 68 ஓவர்கள் விளையாடி 3 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் சேர்த்துள்ளது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 118 ரன்களுடனும், ரஹானே 53 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அபு ஜயட் அபாரம்: அபாரமாக பந்துவீசிய வங்கதேச பவுலர் அபு ஜயட், ரோஹித், புஜாரா, கேப்டன் விராட் ஆகிய 3 முக்கிய தலைகளின் விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியை மிரளவைத்தார்,