சென்னை, நவ.15: திருமணமாகி 9 மாதங்களே ஆன இளம்பெண் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனியை சேர்ந்தவர் அருணா (வயது 23). இவரது கணவர் ஆனந்தன். இவர்களுக்கு திருமணமாகி 9 மாதங்கள் ஆகின்றன. நந்தனத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் அருணா வேலை பார்த்துவந்துள்ளார்.

ஆனந்தும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு வழக்கம்போல் பணிமுடிந்து 9.30 மணியளவில் ஆனந்தன் வீடு திரும்பியுள்ளார். வீட்டின் கதவை வெகுநேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஆனந்தன் ஜன்னல் வழியாக பார்த்தபோது, அருணா சேலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்த புகாரின்பேரில், வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். திருமணமாகி 9 மாதங்களே ஆன நிலையில், அருணா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதால், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.