தீப்பெட்டிக்கு ஜிஎஸ்டி குறைக்க வேண்டும் நிர்மலா சீதாரமனிடம் கடம்பூர் ராஜூ கோரிக்கை

சென்னை

சென்னை, நவ.16: தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருவதால் தீப்பெட்டிக்கான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய வர்த்தக பொருட்காட்சியில் தமிழ்நாடு நாள் விழாவை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

வரும் 27-ம் தேதி வரை நடைபெறும் இந்த பொருள்காட்சிக்கான கருப்பொருள் எளிதாக வணிகம் செய்தல் என்பதாகும். இந்நிகழ்ச்சிக்கு பிறகு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கடம்பூர் ராஜூ சந்தித்து பேசினார். அப்போது தீப்பெட்டி உற்பத்தியார், சங்கத்தலைவர் ஆ.பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி: நிதியமைச்சர் அவர்களை சந்தித்திருக்கின்றீர்கள், உங்கள் தொகுதி குறித்த கோரிக்கைகள் ஏதும் கொடுத்துள்ளீர்களா?
பதில்: சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைக்குப் பெயர் பெற்றுள்ளதைப் போல, கோவில்பட்டி, சாத்தூர் ஆகிய பகுதிகள், இந்தியா முழுவதற்கும் தேவையான தீப்பெட்டிகளைத் தயாரிக்கும் தொழிலுக்குப் பெயர் பெற்றுள்ளது. தீப்பெட்டி தயாரிக்கும் தொழில், என்னுடைய தொகுதியான கோவில்பட்டி மட்டுமன்றி, எங்களுடைய மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்ற தொழிலாக அமைந்துள்ளது. காலம்காலமாக, இன்னும் சொல்லப்போனால், இலட்சக்கணக்கான பெண் தொழிலாளர்கள் பயன்பெறுகின்ற வகையில் அமைந்துள்ளது. தீப்பெட்டி தயாரிப்பதற்குத் தேவையான அனைத்து மூலப் பொருட்களும் 12 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரி உள்ளபோது, தீப்பெட்டிக்கு 18 விழுக்காடு என்ற ஒரு வேறுபாடு இருக்கின்ற காரணத்தினால்,
18 விழுக்காடு என்றிருப்பதை 12 விழுக்காடாக குறைக்க வேண்டுமென்று மத்திய நிதியமைச்சரிம் கோரிக்கை வைத்திருக்கின்றோம். அதற்காக அங்குள்ள நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் ஆகிய இரண்டு சங்கங்களைச் சேர்ந்த அனைத்துப் பிரதிநிதிகளும் எங்களுடன் கலந்து கொண்டு மத்திய நிதியமைச்சரிடம் இதனை விளக்கியுள்ளார்கள். அவர்களும் அதனை பரிசீலிப்பதாகத் தெரிவித்திருக்கின்றார்கள்.