கொழும்பு, நவ.16 இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று துவங்கியது. பகல் 1 மணியளவில் சுமார் 50 சதவீத வாக்குகள் பதிவாகின. வடமேற்கு மாகாணத்தில் வாக்காளர்கள் சென்ற பேருந்துகள் மீது மர்ம ஆசாமிகள் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கி சூடு சம்பவமும் நடந்தது. ஆனால் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை. இலங்கை அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே (வயது 70), பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில், முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசா (52) போட்டியிடுகிறார். மொத்தம், 35 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.

இலங்கையில் எட்டாவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவுகள் தற்போது வரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மொத்தம் 12,845 வாக்குச் சாவடிகளில் வாக்களித்து வருகின்றனர். மொத்தம் 1.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு முஸ்லீம் வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகள் மீது மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். கார் டயரை எரித்து சாலையில் போட்டு வாகனங்களை நிறுத்த முயன்றனர்.

ஆனால் எந்த சேதமும் ஏற்படவில்லை. இதனையடுத்து பேருந்தை ஓட்டுநர் செட்டிகுளம் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றார். இப்பேருந்துக்குப் பின்னால் வந்த பேருந்துகளையும் தடுக்கும் வகையில் மரங்களை வெட்டி தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இது தொடர்பாக சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த இடத்துக்கு வந்த போலீசார் பொதுமக்களின் உதவியோடு மரங்களை அகற்றி மன்னார் பிரதான சாலைக்கு அனுப்பி வைத்தனர்.

பகல் 1 மணி அளவில் பல இடங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்திய வம்சாவளி தமிழர்கள் மிகவும் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 10 மணிவரை இந்திய வம்சாவளி தமிழர்கள் வசிக்கும் நுவரெலியாவில் 40% வாக்குகள் பதிவாகி உள்ளன.