பம்பை, நவ.16: மகரவிளக்கு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் ஆலயம் இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டுவார்.

அதைத்தொடர்ந்து சபரி மலை கோவில் 18-ம் படிக்கு கீழ் உள்ள ஆழியில் கற்பூரம் மூலம் தீ மூட்டப்படும். அதன் பிறகு ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதீர் நம்பூதிரியும், மாளிகைபுரத்தம்மன் கோவில் மேல்சாந்தியாக பரமேஸ்வரன் நம்பூதிரியும் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இரவு 10 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும்.

அனைத்து வயது பெண்களும் கோயிலுக்குள் அனுமதிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் வழக்கை ஏழு பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றியதால் பெண்களை அனுமதிப்பதா வேண்டாமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இதனால் சபரிமலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் பம்பையில் இருந்து மேலே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகு நிலக்கல் பகுதியில் நிறுத்தப்பட்டது.

இதனிடையே இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்தர் கோயிலுக்கு வரும் பெண்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகலை எடுத்து வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று கூறியுள்ளார்