இந்தூர், நவ.16: இந்திய அணி 493 ரன்களில் டிக்ளர் செய்ததையடுத்து, தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி, மீண்டும் இந்திய பவுலர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறியது. இந்தியா – வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் செய்த வங்கதேச அணி 150 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து சுருண்டது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொற்ப ரன்களிலும், கேப்டன் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். இருப்பினும், மற்றொரு தொடக்க வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசி அணியின் ஸ்கோரை வலுவாக்கினார். 6 சிக்ஸர்கள், 28 பவுண்டரிகள் உட்பட 243 ரன்கள் தெறிக்கவிட்டு அசத்தினார்.

அதன்படி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 493 ரன்கள் குவித்தது. ஜடேஜா 60 (76) ரன்களுடனும், உமேஷ் யாதவ் 25 (10) ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி நேற்று மட்டும் 88 ஓவர்களில் 407 ரன்கள் குவித்தது. வங்கதேச அணி தரப்பில் அபு ஜையது இந்திய அணியின் முக்கிய தலைகளின் விக்கெட்டுகள் உட்பட 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்த நிலையில், 3-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. 493 ரன்களுடன் இருந்த இந்திய அணி டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து, வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸை போன்றே, இந்த இன்னிங்ஸிலும் தொடக்க வீரர்கள் இஸ்லாம், இம்ருல் தலா 6 ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பினர். கேப்டன் மோமினுள்ளும் 7 ரன்களில் அவுட்டாகினர்.

அதன்படி, மதிய உணவு இடைவேளையின்போது, வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் மட்டுமே சேர்த்தது. முஷ்ஃபிகூர் வழக்கம்போல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். மதியம் 1 மணிநேர நிலவரப்படி, வங்கதேச அணி 33.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்தது. முஷ்ஃபிகூர் 25 ரன்களுடனும், லிட்டன் தாஸ் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.