டிசம்பர்13-க்குள் தேர்தல் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

TOP-1 இந்தியா முக்கிய செய்தி

புதுடெல்லி, நவ.18: டிசம்பர் 13ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பணையை வெளியிட்ட மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி கடந்த 3 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதம் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தலை தமிழகத்தில் நடத்த வேண்டுமென கடந்த ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றதால் தொழில்நுட்ப விவகாரங்களை காரணம் காட்டி நான்கு வார கால அவகாசம் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் கோரப்பட்டது.

இதனை எதிர்த்து மனுதாரரான ஜெய் சுக்கின் உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் தான் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த காலதாமதம் ஆனது என்றும் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து விட்டோம் டிசம்பர் முதல் வாரம் குறிப்பாக டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை வெளியிட அத்தனை முயற்சியும் முழுமையாக மேற்கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட திமுக தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, தமிழகத்தில் தொகுதி மறு வரையறை பணிகள் நிறைவடையாமல் அவசரகதியில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த முயற்சிப்பதாகவும், இதுதொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் தொகுதி மறு வரை பணிகள் முழுமை பெறாத நிலையில் உள்ளாட்சி தேர்தலை எப்படி நடத்த முடியும் எனவும் கேள்வி எழுப்பினர்? அதற்கு பதிலளித்த நீதிபதி தீபக் குப்தா, உங்களது வழக்கு எந்த அமர்வு முன்பாக நிலுவையில் இருக்கிறதோ அங்கு சென்று இதுகுறித்து முறையிடுங்கள் என்றும் இது உள்ளாட்சி தேர்தலை நடத்துவது சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கு என்றும் பதிலளித்தார்.

பிறகு உத்தரவை வாசித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரும் 13-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சம்பந்தமாக அறிவிப்பாணையை வெளியிடவேண்டும் என்றும் இது குறித்த முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர் தேர்தல் ஏற்பாடுகள்: இதனிடையே உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக சமீபத்தில் தூத்துக்குடி மற்றும் சிவகங்கை சென்ற மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பல்வேறு ஆலோசனை கூட்டங்களை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு, வாக்குபதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி, மாதி வாக்குபதிவு என பல்வேறு பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தேர்தல் செலவிற்கு உரிய நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர்கள் முன்வைத்தனர்.