சென்னை, நவ.18: தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேர்வுக்குழு இன்று கூடியது. மாநில தலைமை தகவல் ஆணையராக இருந்த ஷீலாபிரியா கடந்த சில மாதங்களுக்கு முன் ஓய்வுபெற்றார். இதையடுத்து முதலமைச்சர் தலைமையிலான தேர்வு குழு புதிய தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்வதற்காக தேடுதல் குழுவை அமைத்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான குழுவில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஓய்வுபெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி வெங்கடேசன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு தேடுதல் குழுவால், தேர்வு குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதை முதலமைச்சர் தலைமையிலான தேர்வு குழு பரிசீலித்து மூன்று பேர் கொண்ட பட்டியலை ஆளுநருக்கு அனுப்பி வைப்பார்கள். அதிலிருந்து ஒரு நபரை தேர்வு செய்து ஆளிநர் அறிவிப்பார். இந்த நிலையில் தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு குழு கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக உள்ள பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் சண்முகம் கலந்து கொண்டனர். குழுவின் மற்றொரு உறுப்பினரான எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தை புறக்கணித்தார்.

கூட்டத்தை புறக்கணித்ததற்கான காரணத்தை கடிதம் மூலம் நிர்வாக சீர்த்திருத்தத்துறை செயலர் ஸ்வர்ணாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அதில் மாநில தலைமைத் தகவல் ஆணையர் பதவிக்கு எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள்? அவர்களின் “பயோ டேட்டா ” விவரங்கள் உள்ளிட்ட எந்த தகவல்களும் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுப்பப்பட்ட கடிதத்துடன் இணைக்கப்படவில்லை எனவும், தேடுதல் குழுவின் பரிந்துரையினை ஆழ்ந்து பரிசீலனை செய்து தெரிவுக்குழு உறுப்பினர் என்ற முறையில் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்கும் வாய்ப்பு திட்டமிட்டு மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆகவே வெளிப்படைத்தன்மை துளியும் இல்லாத இந்த தெரிவுக்குழு கூட்டத்தில், தான் பங்கேற்பது பொருத்தமாக இருக்காது என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.