வரும் செப்டம்பரில் ரஜினி புதிய கட்சி பிஜேபியுடன் கூட்டணி? தமிழருவி மணியன்

TOP-4 அரசியல் முக்கிய செய்தி

சென்னை, நவ.18: நடிகர் ரஜினிகாந்த் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் புதிய கட்சியின் பெயரை அறிவிப்பார். கட்சிக்கான கொள்கை மற்றும் சட்டவிதிகளை உருவாக்கும் பணி இறுதிகட்டத்தை அடைந்துவிட்டது. கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திப்பார் என்று ரஜினிக்கு நெருக்கமான தமிழருவி மணியன் கூறியுள்ளார். கடந்த 8-ம் தேதி ரஜினி அளித்த பேட்டியில் தமிழக அரசியலில் இன்னும் வெற்றிடம் இருப்பதாகவே நான் உணருகிறேன். எனக்கு காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது. ஆனால் யாராலும் காவி சாயம் பூச முடியாது என்று கூறினார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் கூறினார். விக்ரவாண்டி, நாங்குனேரியில் இடைத்தேர்தல் அதிமுக வெற்றி பெற்றதன் மூலம் வெற்றிடம் நிரப்பப்பட்டு விட்டது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இதற்கு ரஜினிகாந்த் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

இப்போதைய நிலையில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். ரஜினி மக்கள் மன்றத்திற்கு புதிய பெயர் சூட்டப்படும் என்றும் கட்சியின் சட்டவிதிகள் மற்றும் கொள்கைகளை உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டது என்றும் மக்கள் மன்ற வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது. ரஜினிக்கு நெருக்கமான பேச்சாளரும், எழுத்தாளருமான தமிழருவி மணியன் கூறுகையில், 2021 சட்டமன்ற தேர்தலில் ரஜினி தலைமையில் புதிய கூட்டணி அமையும். தமிழக அரசியலில் உண்மையான வலிமைமிக்க தலைவர் இல்லை என்றே நான் உணருகிறேன். ரஜினியின் புதிய கட்சி பிஜேபி உள்ளிட்ட பிற கட்சிகளுடன் கூட்டணி சேருவதற்கு வாய்ப்பு உண்டு என்றார். மேலும் அரசியல் வியூகத்தை வகுப்பது தொடர்பாக மூத்த பிஜேபி தலைவர்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் சில வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நதிகளை இணைப்பு, ஹைட்ரோகார்பன் ரத்து, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு, ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் மத்திய அரசிடன் வைப்பார் என்றும் கூறப்படுகிறது. ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணா, நேற்று தர்மபுரியில் பேசுகையில், எனது சகோதரர் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்றார். ரஜினியின் கையில் தற்போது 3 படங்கள் உள்ளன. தர்பார் பொங்கலுக்கு வெளியிடப்படுவதாக உள்ளது. சன் நெட்வொர்க் தயாரிப்பில் உருவாகும் இன்னொரு படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என தெரிகிறது. 3-வது படத்தை சட்டமன்ற தேர்தல் சமயத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அரசியல் கோணத்தில், பஞ்ச் டயலாக்குடன் தயாரிக்கப்படும் என்றும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுவதாக அமையும் என்றும் கூறப்படுகிறது.