கோத்தபய ராஜபக்ஷே அதிபராக பதவியேற்பு புதிய பயணத்தை தொடருவோம் என பேச்சு

TOP-6 உலகம் முக்கிய செய்தி

கொழும்பு, நவ.18: இலங்கையின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து, அனுராதபுரம் ருவன்வெலி மகாசாய பௌத்த விஹாரையில் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டின் 8-வது அதிபராகப் கோத்தபய ராஜபக்ஷே இன்று பதவியேற்றார். இலங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில், முன்னாள் பாதுகாப்புச் செயலரும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்ஷே (70) வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவை விட 13 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

அதையடுத்து, நாட்டின் 8-வது அதிபராக அவர் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். இலங்கையின் வடக்கு மத்திய மாகாணத்தில் உள்ள பாரம்பரிய மிக்க அனுராதபுரம் ருவன்வெலி மகாசாய பௌத்த விஹாரையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பெருமளவிலான மக்கள் திரணடு வந்திருந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே உள்ளிட்ட பல அரசியல் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அதிபராக பதவியேற்றதும் கோத்தபய ராஜபக்ஷே, அரசு அலுவலகங்களில் அரசு தலைவர்களின் படங்களை காட்சிப்படுத்தக்கூடாது, அரசு அலுவலகங்களில் அரசு தேசிய சின்னம் மட்டுமே காட்சிபடுத்தப்பட வேண்டும் என்று தனது முதல் உத்தரவில் கையெழுத்திட்டார்.
பதவியேற்றதை தொடர்ந்து கோத்தபய ராஜபக்ஷே பேசுகையில், இலங்கையின் ஒற்றுமையையும் நாட்டின் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் கடமை என்னுடையது. எனது அரசாங்கத்தின் முக்கிய செயற்பாடு நாட்டின் பாதுகாப்பு என்பதே என்று உறுதி கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.