புதுமந்த்ராலயத்திற்கு மகா கும்பாபிஷேகம் ராகவேந்திர மட பீடாதிபதி நடத்தி வைத்தார்

சென்னை

தாம்பரம், நவ.18: சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புதுமந்த்ராலயம் ஆலய பிருந்தாவன பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கர்நாடகா மாநிலம் நஞ்சங்கூடு ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீசுபதீர்ந்திர தீர்த்த சுவாமிகள் குடமுழுக்கு செய்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். ஸ்ரீராகவேந்திரர் மடத்திற்கு தனக்குச் சொந்தமான 26 சென்ட் இடத்தில் புது மந்த்ராலயம் கட்டிக் கொடுத்து வழங்கிய கோயில் ஸ்தாபகரும், தாம்பரம் முன்னாள் நகர்மன்றத் தலைவருமான எம்.கரிகாலனை மடத்தின் கௌரவ நிர்வாக மேலாளராக நியமனம் செய்தார். முன்னதாக, காலையில் பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 11.30 மணி அளவில் கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றி பீடாதிபதி ஸ்ரீசுபதீர்ந்திர தீர்த்த சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருளாசி வழங்கி பீடாதிபதி ஸ்ரீசுபதீர்ந்திர தீர்த்த சுவாமிகள் பேசியதாவது:- இறை பக்தியும், ஆன்மீகமும் தழைத்தோங்கி சிறந்து விளங்கும் ஆலயங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் தான் ஸ்ரீராகவேந்திரர் அவதரித்தார். புவனகிரியில் பிறந்து மதுரையில் கல்வி பயின்று, பின்னர் கும்பகோணத்தில் இந்து சமய சாஸ்திரங்களைக் கற்று தேர்ச்சி அடைந்தார். அவரது ஆன்மீக தேடல் பயணம் தமிழகத்தில் இருந்து தான் தொடங்கியது. தமிழகமெங்கும் பல்வேறு ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு, கர்நாடக மாநிலம் மந்த்ராலயத்தில் மடம் உருவாக்கி, அங்கு ஜீவசமாதி அடைந்த ஸ்ரீராகவேந்திரர் சுவாமிக்கு, அவரது பக்தரான கரிகாலன், தமிழ்நாட்டில் சேலையூரில் மந்த்ராலயம் ஆலயத்தின் அமைப்புடன், ஏராளமான பொருட்செலவில் ஆலயத்தை அமைத்து, நமது மடத்திற்கு வழங்கி, அவரும் அவரது குடும்பத்தினரும் புண்ணியம் தேடி இருக்கிறார்கள்.

இனி இந்த ஆலயம் மடத்தின் நேரடிப்பொறுப்பில் செயல்பட்டாலும், ஆலயத்தின் ஸ்தாபகரான கரிகாலனை கௌரவ நிர்வாக மேலாளராக நியமித்துள்ளோம். அவர் ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் ஆலய வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு தொடர்ந்து உறுதுணையாகத் திகழ வேண்டும் என்று நாம் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார் என்றார். கும்பாபிஷேகம் விழாவில் ஸ்தாபகர் ம.கரிகாலன், தாம்பரம் இந்து மிஷன் செயலர் சீனிவாசன், தாம்பரம் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.