ஞானவேல் ராஜாவுக்கு கோர்ட் பிடிவாரண்ட்

சென்னை

சென்னை, நவ,18: வருமான வரி வழக்கில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தனது வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து, குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்வதற்காக கேள்விகளை கேட்டு பதிவு செய்யும் நடைமுறைக்காக ஞானவேல்ராஜாவை ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

பலமுறை வாய்ப்பளித்தும் ஞானவேல்ராஜா ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என வருமானவரித் துறை தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, ஞானவேல்ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். பின், இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.