435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு அலமாரியில் அடுக்கி வைத்த ரூ.23 கோடி பறிமுதல்

குற்றம் தமிழ்நாடு

கரூர், நவ.18: கரூர் வெண்ணைமலை பகுதியில் உள்ள கொசுவலை நிறுவனத்தில் இன்று 4-வது நாளாக வருமானவரி சோதனை நடைபெற்றது. ரூ.435 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் அதிபர் வீட்டில் ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, வெண்ணைமலை பகுதியில் ஷோபிகா என்கிற பிரபல தனியார் கொசுவலை ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. கரூர்-சேலம் பை-பாஸ் சாலை சிப்காட் மற்றும் சின்னதாராபுரம் ரோடு உள்ளிட்ட இடங்களில் அந்த நிறுவனம் சார்பில் கொசுவலை உற்பத்தி நடக்கிறது. இங்கு உற்பத்தியாகும் கொசுவலைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்தநிலையில் இந்த நிறுவன கணக்குகளை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்த போது, அந்த நிறுவனம் வரிஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக கடந்த 15ந்தேதி, கரூர், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் தனித்தனியாக பிரிந்து சென்று இந்த கொசுவலை நிறுவன குழுமத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டனர். அதன்படி, வெண்ணைமலையில் உள்ள இந்த கொசுவலை நிறுவன அலுவலகம் மற்றும் கரூர்-சேலம் பை-பாஸ் சாலையில் கொசுவலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மற்றும் கரூர் ராம்நகரில் உள்ள அந்த நிறுவன உரிமையாளர் வீடு மற்றும் மதுரை, கோவை மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள இந்த குழுமத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் அந்த நிறுவன உரிமையாளர் வீட்டில், துணிகள் அடுக்கிவைக்கும் அலமாரியில் 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அந்த பணம் குறித்து விசாரித்த போது, அது கணக்கில் வராத பணம் என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதை பணம் எண்ணும் எந்திரம் கொண்டு அதிகாரிகள் எண்ணிப்பார்த்த போது அதில் சுமார் ரூ.23 கோடி இருப்பது தெரியவந்தது. இந்த சோதனையில் ரூ.23 கோடி மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து இருப்பதாக வருமான வரித்துறை உயரதிகாரி ஒருவர் கடந்த 16ந்தேதி தெரிவித்தார். இதில், ரூ.435 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்தது. தொடர்ந்து இன்று 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
கொசுவலை நிறுவன உரிமையாளரின் வீடு, தொழிற்சாலை மற்றும் அலுவலகம் உள்பட 5 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.