மேயருக்கு மறைமுக தேர்தல் முதல்வர் தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் மேலும் பல முக்கிய முடிவுகள்

TOP-1 சென்னை முக்கிய செய்தி

சென்னை,நவ.19: உள்ளாட்சி தேர்தலில் மேயர், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பதவிகளை மறைமுகமாக தேர்ந்தெடுக்கும் முறைக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. காவிரி-வைகை-குண்டாறு இணைப்புக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கூட்டம் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள், தலைமை செயலாளர், அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக தயாராகி வருகிறது. இரண்டு கட்சிகளிலும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்பமனுக்கள் பெறுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் விருப்ப மனு வினியோகத்தை தொடங்கியுள்ளன. அடுத்த கட்டமாக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்தும் சட்டத் திருத்தத்திற்கு இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படதாக தெரிகிறது. கடந்த 2016-ம் ஆண்டு மேயர் பதவிக்கு கவுன்சிலர்கள் மூலம் மறைமுகத் தேர்தல் நடத்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சட்டத்திருத்தம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற பழனிசாமி அரசு, கடந்த 2018-ம் ஆண்டு, ஜெயலலிதா கொண்டு வந்த சட்டத் திருத்தத்தில் மீண்டும் மாற்றம் செய்தது. இதனால், தமிழகத்தில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யும் முறை மீண்டும் கொண்டு வரப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இதில் 3 லட்சம் கோடி அளவுக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி சுற்றுப்பயணம் சென்றார். இதன்மூலம் 8 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதேபோன்று கடந்த 10 நாட்களாக அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வீட்டுவசதி வாரிய தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். இந்த ஓப்பந்தங்களுக்கு இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, வெளிநாட்டு நிறுவனங்களுக்கான அனுமதி உள்ளிட்டவை குறித்தும் அமைச்சரவையில் ஆலோசிப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய நீர் மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ் 7,677 கோடியில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டு தமிழக அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.