சென்னை, நவ.19: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்துள்ள பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட், வரும் 25-ம் தேதி காலை 9.28 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இதில் இந்திய ராணுவத்துக்கு என சிறப்பு செயற்கைக்கோள் இடம்பெற்றுள்ளது. தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் அவர்களின் நடமாட்டம் ஆகியவற்றை கண்காணித்து துல்லியமாக படம் எடுக்கும் சாதனம் இந்த செயற்கைக் கோளில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இத்தகைய செயற்கைக் கோள் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகளின் முகாம்கள் கண்டு துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் 13 வணிக நானோ வகை செயற்கைகோள்கள் இந்த ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் ‘எக்ஸ் எல்’ வகையில் 21-வது ராக்கெட்டாக அமைகிறது. மேலும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 74-வது ராக்கெட் என்ற பெருமையையும் இந்த ராக்கெட் பெற்றுள்ளது.

புவி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வியலுக்காக விண்ணில் ஏவப்படும் இந்த கார்டோசாட்-3 செயற்கைக்கோள் மேம்படுத்தப்பட்ட வகை செயற்கைக்கோளாகும். இது துல்லியமான படங்களை அனுப்பும் திறன் கொண்டது. இந்த செயற்கைக்கோள் 509 கிலோ மீட்டர் உயரத்தில் புவிவட்ட சுற்றுப்பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. இந்த ராக்கெட்டில் பொருத்தப்படும் 13 நானோ செயற்கைகோள்கள் அமெரிக்காவை சேர்ந்தவையாகும். தற்போது ராக்கெட்டை தயார் செய்யும் இறுதிகட்ட பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். இதற்கான கவுண்ட்டவுன் வரும் 23-ம் தேதி முதல் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.