காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக் திருட்டு

குற்றம் சென்னை

சென்னை, நவ.19: வில்லிவாக்கம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட பைக் ஒன்றினை, திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர். அண்ணாநகரை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 24). இவர், கடந்த 30-ம் தேதி 200 அடி சாலை ராஜமங்கலம் அருகே பைக்கில் சென்றுக்கொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டு காயமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரசாந்த், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த விபத்து குறித்து, திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ஆர்.டி.ஓ. ஆய்விற்காக பிரசாந்தின் பைக்கை பறிமுதல் செய்து அதனை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் நிறுத்திவைத்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 16-ம் தேதி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பைக்கை ஆய்வு செய்ய வில்லிவாக்கம் காவல் நிலையம் சென்றுள்ளனர். அப்போதுதான் பைக் திருடப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தபோது, நவம்பர் முதல் வாரத்திலேயே மர்மநபர் ஒருவர் வந்து பைக்கை திருடிச்சென்றது அதில் பதிவாகியுள்ளது. இதனடிப்படையில், பைக்கை திருடிச்சென்று தப்பியோடிய மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.