தாயின் கள்ளக்காதலனை வெட்டிக்கொன்ற மகன் மேலும் 2 கூட்டாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

குற்றம் சென்னை

சென்னை, நவ.19: ஆட்டோ டிரைவரை குத்தி கொலை செய்தது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாது:- சென்னை அடுத்த சித்தாலப்பாக்கம் வேங்கைவாசல் பகுதியை சேர்ந்தவர் அன்சர்பாஷா (வயது 31) ஆட்டோ டிரைவர். நேற்றிரவு 11 மணி அளவில் அன்சர்பாஷா, அவரது தாய் மெகபூபா மற்றும் லட்சுமி ஆகியோர் கொளத்தூர் செங்குன்றம் சாலை மற்றும் ஸ்கூல் ரோடு சந்திப்பு அருகே ஆட்டோவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் அன்சர்பாஷாவை சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது.

இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரின் கௌத்தூர் இன்ஸ்பெக்டர் சண்முகவேலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்த அன்சர்பாஷா உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக அன்சர்பாஷாவின் தாய் மெகபூபா கொடுத்த புகாரின் பேரில் ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அன்சர்பாஷாவுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியது என்பதும், மனைவி பெயர் பர்வீன் (வயது 28) என்பது தெரியவந்தது.

இவர்களுக்கு 8 வயது மகன், 7 வயதில் ஒரு மகள் இருப்பது தெரியவந்தது. மேலும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பர்வீன் தனது குழந்தைகளுடன் புளியந்தோப்பில் தனியாக வசித்து வந்தது தெரியவந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விநாயகபுரத்தில் தங்கி அன்சர்பாஷா சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்ததாகவும், அப்போது அந்த பகுதியை சேர்ந்த 38 வயது உள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட அந்த பெண்ணின் மகன்கள் அன்சர்பாஷாவுடன் ஏற்கனவே தகராறு செய்ததாகவும், அதில் ஒருவனுடைய காதை அன்சர்பாஷா அறுத்து விட்டதாகவும் தெரியவந்தது.

இது தொடர்பாக காவல்துறையில் வழக்கு உள்ளதும் தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக ஒரு வருடத்திற்கு முன்பு அன்சர்பாஷாவை அந்த பெண்ணின் மகன் மற்றும் சிலர் சேர்ந்து கைகளை வெட்டியதும், அது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் நேற்றிரவு அன்சர்பாஷா தாய் மற்றும் ஒரு பெண்ணுடன் ஆட்டோவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்ததை பார்த்த அந்த கும்பல் அன்சர்பாஷாவை கத்தியால் வெட்டியதாக தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக பெரிய அஜித் மற்றும் அவரது கூட்டாளிகளான சின்ன அஜித் மற்றும் அஸ்வின் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.