5 இந்திய முறை, ஓமியோபதி அரசு மருத்துவகல்லூரிகள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்

சென்னை

சென்னை, நவ.19: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் ஐந்து இந்தியமுறை மருத்துவம் மற்றும் ஓமியோ பதிக்கு அரசு மருத்துவக்கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளது என்று அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறினார். தேசிய இயற்கை மருத்துவ தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அண்ணா நகரில் உள்ளஅரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இயற்கை ஆரோக்கிய கண்காட்சி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ விழிப்பணர்வு கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்து, பாத அழுத்த சிகிச்சை நடைபாதையினை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் திறந்து வைத்து நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:- மகாத்மா காந்தியும், இயற்கை மருத்துவமும் என்ற கருப்பொருளை கொண்ட தேசிய இயற்கை மருத்துவ தினம் தமிழ்நாட்டில் மொத்தம் 177 யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையங்களில் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஆரோக்கிய கண்காட்சியில் மனித ஆற்றல் மருத்துவம், யோகா மருத்துவம், அக்கு பஞ்சர் முறைகள், நறுமண சிகிச்சை, உணவு மருத்துவம், மூலிகை மருத்துவம், உண்ணா நோன்பு சிகிச்சை, நீர் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, மண் சிகிச்சை, காந்த சிகிச்சை, சர்க்கரை அளவு, உடல் எடை அளவு ஆகிய மருத்துவப் பரிசோதனைகள் எவ்வித கட்டணமு மில்லாமல் மேற் கொள்ளப் படுகின்றன.

மேலும் இங்கு இயற்கை வழியில் உடற்பருமனை குறைக்க சிறப்பு சிகிச்சைகள் மேற் கொள்ளப்படுகிறது. இச்சிகிச்சை முறையில் எவ்வித பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சைகளான நீராவி குளியல், வாழை இலை குளியல், மண் குளியல், இயற்கை உணவு, உண்ணா நோன்பு, இயற்கை மூலிகை சிகிச்சை மற்றும் யோகா சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.மேலும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் ஐந்து இந்தியமுறை மருத்துவம் மற்றும் ஓமியோ பதிக்கு அரசு மருத்துவ க்கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளது என்றார்.