பிரதமர் மோடி – சரத் பவார் சந்திப்பு அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உடன் இருந்தனர்: சிவசேனா கலக்கம்

TOP-4 சென்னை முக்கிய செய்தி

புதுடெல்லி, நவ.20: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்துவரும் நிலையில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் இன்று பிரதமர் மோடியை புதுடெல்லியில் சந்தித்து பேசினார். மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக சந்தித்ததாக கூறப்பட்டாலும் இதில் அரசியல் முக்கியத்துவம் இருப்பதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு மோடி-பவார் சந்திப்பு நடைபெற்றது. மாநிலங்களவையின் 250வது அமர்வு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி இரண்டு முறை தேசியவாத காங்கிரஸ் கட்சியை புகழ்ந்து பேசியுள்ளார்.

பி.ஜே.டி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்ற கட்சிகளை, தரம் தாழ்த்தி பேசுவதோ அல்லது சபையின் முன்னுக்கு வந்து கூச்சல் போடுவதோ போன்ற செயல்களை செய்யக்கூடாது என்று முடிவு செய்து, அதை செயல்படுத்தி வருகிறார்கள். இந்த இரு கட்சிகளின் அரசியல் வளர்ச்சி பயணத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இதனிடையே கடந்த 18-ம் தேதி மகாராஷ்டிராவின் அரசியல் நிலைமை குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு பேசிய சரத் பவார், மகாராஷ்டிராவின் அரசியல் நிலைமை குறித்து மட்டும் சோனியா காந்தியிடம் விவாதித்ததாகவும், மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பது குறித்து எந்த ஆலோசனையும் செய்யப்பட வில்லை என்று பவார் கூறியது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சிவசேனா கட்சிக்கு ஏமாற்றத்தை அளித்தது.

சிவசேனாவில் எத்தனை எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பது எனக்குத் தெரியாது. அவர்களிடம் கேளுங்கள். நாங்கள் அனைவருடன் இருக்கிறோம். எங்கள் கட்சியின் கொள்கையை நாங்கள் மட்டுமே தீர்மானிப்போம். யாருடன் செல்ல வேண்டும் என்பதை நாங்கள் மட்டும் தான் தீர்மானிப்போம் என்று கூறியிருந்தார். மாநிலங்களவையில் என்.சி.பியைப் பாராட்டிய பிரதமர் மோடி குறித்து கேள்விக்கு, பாராளுமன்ற சபையின் கவுரத்தை கவனித்துக்கொள்வது முக்கியம். இது எங்கள் கொள்கை. நாங்கள் பாஜகவுக்கு எதிராக மட்டுமே தேர்தலில் போராடினோம் என்று சரத் பவார் கூறினார்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இன்று நண்பகல் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். விவசாயிகள் பிரச்சனை குறித்து அவர்கள் பேசியதாக கூறப்பட்டாலும் மகாராஷ்டிரா மாநில அரசியல் நிலைமை குறித்து அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அண்மையில் பெய்த கடும்மழையால் 20 லட்சம் ஹெ‘கடேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. சுமார் 5 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்க வேணடும் என்று சரத்பவார் வலியுறுத்தியதாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உடன் இரருந்தனர்.