மயக்க மருந்து கொடுத்து கொள்ளை ரூ.7 லட்சம் நகை, பணத்துடன் சமையல்காரர் கைது

குற்றம் சென்னை

சென்னை, நவ.20: வீட்டில் இருப்போருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றுடன் தப்பியோடிய நேபாளியை சேர்ந்த சமையல்காரரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கீழ்பாக்கம் ஹால்ஸ் சாலையை சேர்ந்தவர் சீனிவாசலு (வயது 54). சௌகார்பேட்டையில் உள்ள ஆயில் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டில் நேபாளத்தை சேர்ந்த சுஜன் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சமையல் வேலை செய்து வந்துள்ளார். பின்னர் வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கே சென்றுள்ளார்.

இதனிடையே, கடந்த 3 மாதத்திற்கு முன்னர் மீண்டும் சென்னைக்கு வந்த சுஜன், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஷோபா தயார் செய்யும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பழைய முதலாளியான சீனிவாசலு வீட்டுக்கு சென்ற சுஜன், அன்றிரவு உணவு தயார் செய்து தருவதாக கூறியுள்ளார், ஏற்கனவே வீட்டில் பணியாற்றியவர் என்ற நம்பிக்கையில், சீனிவாசலுவும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, சுஜன் சமைத்த உணவை சீனிவாசலு, அவரது மனைவி நந்தினி ஸ்ரீ , மகள் சாய் ஜஸ்வந்தி, டிரைவர் சக்திவேல், நேபாளை சேர்ந்த காவலாளி கிருஷ்ணா ஆகியோர் சாப்பிட்டதும் அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை சுஜன் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார். காலையில் மயக்கம் தெளிந்து பார்த்த சீனிவாசலு, நகைகள், பணம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், கீழ்பாக்கம் உதவி கமிஷனர் ராஜா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி,6 மணி நேரத்திலேயே சுஜனை பிடித்தனர். நேபாளத்திற்கு தப்பிச்செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்த சுஜனை, போலீசார் கையும் களவுமாக கைது செய்து, ரூ. 7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.35,000 ரொக்கப்பணம் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். குற்றவாளியை விரைந்து கண்டுபிடித்த போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.