ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா செய்கிறார் மகிந்த ராஜபக்சே புதிய பிரதமராகிறார்

அரசியல் உலகம்

கொழும்பு, நவ,20: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். அமைச்சரவை சிறப்பு கூட்டத்திற்கு பிறகு அவர் இந்த முடிவை எடுத்தார். புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்க உள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே கடந்த 17-ந் தேதி பதவியேற்று கொண்டார். இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசா தோல்வி அடைந்தார். இதையடுத்து தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 1, 2020 வரையிலான குறுகிய காலகட்டத்துக்கான 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை புதன்கிழமை பதவியேற்கவுள்ளது. இதில் தங்களுக்கு ஆதரவு அளித்த கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அமைச்சரவைப் பதவி வழங்க அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.இந்தசூழ்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு அமைச்சரவை அவசர கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்குப் பின் தனது ராஜினாமா கடிதத்தை அதிபரிடம் வழங்க உள்ளதாக இலங்கை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதையடுத்து, தனது சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக கோத்தபய நியமிக்கலாம் என்று கூறப்படுகிறது.