தாய்மாமனை கொலை செய்தவர் கைது தாயை திட்டியதால் ஆத்திரம்

குற்றம் சென்னை

சென்னை, நவ.20: ஆலந்தூர் அருகே தாயிடம் சண்டையிட்ட தாய்மாமனை, கல்லால் அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆலந்தூர் ஆசார் கானா தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன்-சரஸ்வதி தம்பதியினர். இவர்களின் மகன் கோகுல்ராஜ் (வயது 31). இதே பகுதியில் வசிக்கும் சரஸ்வதியின் சகோதரரான எத்திராஜ் (வயது 60) என்பவர், தினந்தோறும் மது குடித்துவிட்டு சரஸ்வதியின் வீட்டிற்கு சென்று சண்டையிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், நேற்றிரவு 11.30 மணியளவில் எத்திராஜ் வழக்கம்போல் மீண்டும் சரஸ்வதியின் வீட்டிற்கு சென்றுவிட்டு சண்டையிட்டதாக தெரிகிறது. இதனால். ஆத்திரமடைந்த சரஸ்வதியின் மகன் எத்திராஜ், கோகுல்ராஜை வீட்டை விட்டு வெளியேறும்படி கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் தகராறு முற்றியதில், எத்திராஜ் வீட்டை விட்டு தப்பியோட, அவரை துரத்தி சென்ற கோகுல்ராஜ், இப்ராகீம் தெரு சந்திப்பில் சென்றபோது, எத்திராஜை கீழே தள்ளி, அருகில் இருந்து கருங்கல்லை எடுத்து அவரது முகத்தில் சரமாரியாக அடித்துவிட்டு சென்றுள்ளார். ரத்தவெள்ளத்தில் கிடந்த எத்திராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்துவந்த பரங்கிமலை போலீசார், எத்திராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி, கோகுல்ராஜை கைது செய்தனர்.