52 வாகன உரிமையாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம்

சென்னை

தாம்பரம்,நவ.20: சென்னை புறநகர்ப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வாகன மாசு சோதனை நடவடிக்கையின் போது சிக்கிய 52 வாகன உரிமையாளர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்று தெற்கு சரக இணை போக்குவரத்து கமிஷனர் மணக்குமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சென்னையில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் புகை மாசு நாளுக்குநாள் அதிகரித்து வரும் வருகிறது. இதனால் வாகனங்கள் மூலம் ஏற்படும் புகை மாசைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக போக்குவரத்து துறை கமஷனர் சமயமூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன் பேரில் சென்னை புறநகர்ப் பகுதிகளான மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர், சேலையூர் உள்ளிட்ட 6 இடங்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பிரபாகரன், குமாரா, ஸ்ரீதர் தலைமையில் ஆய்வாளர்கள் கிருஷ்ணன், சுரேஷ்குமார், ஜெயலட்சுமி உள்ளிட்டோர் திடீர் வாகன தணிக்கை சோதனை மேற்கொண்டனர். அப்போது கார்கள்,பேருந்துகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்களைச் சோதனை செய்தபோது, மாசு விளைவிக்கும் 52 வாகனங்கள் கண்டறியப்பட்டு வாகன உரிமையாளர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மூலம் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் திடீர் வாகன தணிக்கை சோதனை நடவடிக்கையை சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.