கல்லூரியில் இலவசமாக படிக்க அரசு சலுகை திருச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

தமிழ்நாடு

திருச்சி, நவ. 20: விளையாட்டுதுறையில் சிறந்து விளங்கும் 100 மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிகளில் இலவசமாக சேர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் 62வது குடியரசு தின தடகள போட்டிகள் துவங்கியது. மாநில அளவில் நடைபெறும் தடகள போட்டி துவக்க விழாவிற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை வகித்தார். அமைச்சர் வளர்மதி சிறப்புரையாற்றினார்.

திருச்சி கலெக்டர் சிவராசு, முசிறி தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், முன்னாள் எம்பி ரத்தினவேல், கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வரவேற்று பேசினார். அதனைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் தடகள போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றிய போது கூறியதாவது:- எல்லா துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருந்து வருகிறது. 2005ம் ஆண்டு விளையாட்டு துறைக்கு தனி பல்கலைக்கழகத்தை தமிழ்நாட்டில் ஜெயலலிதா உருவாக்கினார். விளையாட்டு துறையில் சிறப்பாக பங்களிக்கும் 100 மாணவ, மாணவிகளை கல்லூரிகளில் இலவசமாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்து உயர்நிலை பள்ளிகளிலும், 10 கணினிகளும், மேல்நிலைப் பளிகளில் 20 கணினிகளும் இன்னும் ஒரு மாதத்தில் அமைக்கப்படும். ஜனவரி மாத இறுதிக்குள் 92 ஆயிரம் ஸ்மாரட் போர்டு, 7500 ஸ்மாரர்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார். துவக்க விழாவில் பள்ளி மாணவிகளால் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. போட்டிக்கான ஏற்பாட்டினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஆகியோர் செய்திருந்தனர்.