திருச்சி, நவ.20: துறையூர் அருகிலுள்ள அழகாபுரியைச் சேர்ந்தவர் ஆர். சுவாதி. துறையூரிலுள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் படித்து வந்த இவர், நவம்பர் 15- ஆம் தேதிக்குப் பிறகு வீடு திரும்பவில்லை. கல்லூரிச் சென்ற மகள் வீடு திரும்பாததால், அவரது தந்தை ரவிச்சந்திரன் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சுவாதியை, அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பாஸ்கர் காதலித்து வந்ததும், அவர் நாமக்கல் மாவட்டம், மோகனூரிலுள்ள முருகன் கோயிலில் அவரைத் திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து சுவாதியை உப்பிலியபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வருமாறு போலீசார் கூறியதைத் தொடர்ந்து, அங்கு சுவாதியுடன் பாஸ்கர் காரில் சென்றார்.அப்போது சுவாதியின் உறவினர்கள் காரில் வந்து மிரட்டி வருகின்றனர் என்று சார்பு நீதிமன்றத்துக்குள் நுழைந்து தஞ்சமடைந்தனர். புதுமணத்தம்பதி கொடுத்த புகார் தொடர்பாக பின்தொடர்ந்து வந்து புதுமணத்தம்பதியை மிரட்டி வந்த உறவினர்கள் 5 பேரை துறையூர் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.