தேனி, நவ.21: நடிகர் அஜித்குமாரும் அரசியலுக்கு வரட்டும். அதனால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தேனி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டுறவு வார விழாவில் கலந்துகொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு சென்ற நோக்கம் நிறைவேறியுள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலிலும் இணைந்து நடித்து வருகின்றனர். இருவரும் மிகச் சிறந்த நடிகர்கள். இணைந்து தேர்தலைச் சந்திக்கட்டும். பிறகு கருத்து சொல்கிறேன்.

ஜெயலலிதாவின் வழியில் அதிமுக ஆட்சி நடைபெறுகிறது. அதிமுகவிலும், அரசியலிலும் வெற்றிடம் என்பதே கிடையாது. உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் சந்தித்து வெற்றி பெறுவோம் என்றார் அவர். இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் எப்பகுதியிலும் தமிழர்களுக்கு பிரச்சனையென்றால் அதை தீர்ப்பதற்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும். ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவர்கள் படிப்பதற்காக மட்டுமே வந்துள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார். மேலும், நடிகர் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அஜீத்தும் வரட்டும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமாலும் அரசியலுக்கு வரலாம். யார் வந்தாலும், அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதிமுகவைப் பொறுத்தவரை வெற்றிடம் என்பதே கிடையாது என்றார்.