இந்தியாவுக்கு இரண்டு தங்கப் பதக்கங்கள் ஏர் பிஸ்டலில் மனு பாக்கர், ஏர் ரைபிளில் இளவேனில்

TOP-6 முக்கிய செய்தி விளையாட்டு

புடியான், நவ.21: சீனாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் மனு பாக்கர், தமிழகத்தை சேர்ந்த இளவேனில் ஆகியோர் தங்கம் வென்று அசத்தியுள்ளனர். இதன்மூலம், இந்தியா 2 தங்கத்துடன் பதக்கப்பட்டியலில் 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி சீனாவின் புடியான் நகரில் நவம்பர் 17-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடந்த மகளிருக்கான 10 மீட்டர் ஜூனியர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதி போட்டியில், இந்தியாவின் மனு பாக்கர் 244.7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதன்மூலம், இளையோர் பிரிவில் உலக அளவில் புதிய சாதனையையும், 10 மீ., ஏர்பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற இந்தியாவின் 2-வது பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

மேலும், அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கும் மனு பாக்கர் தகுதி பெற்றுள்ளார். நடப்பாண்டில் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும். இந்த ஆண்டு நடந்து முடிந்த ஜூனியர் ஒலிம்பிக் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் மனு பாக்கர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடந்த மகளிர் சீனியர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த தங்க மங்கை இளவேனில் வாலறிவன் பங்கேற்றார். 250.8 புள்ளிகள் பெற்ற அவர் முதலிடம் பிடித்து தங்கம் பதக்கத்தை தட்டி தூக்கினார்.

சீனியர் பிரிவில் இளவேனிலுக்கு கிடைக்கும் 2-வது தங்கம் இதுவாகும். இதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பிரேசிலில் நடந்த உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியிலும் இளவேனில் தங்கம் வென்று அசத்தியது கவனிக்கத்தக்கது.
இதன்மூலம், இந்தியா 2 தங்கப்பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2 தங்கம், தலா ஒரு வெள்ளி, வெண்கலம் உட்பட 4 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.