எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை

சென்னை, நவ.21: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த கட்சி உறுப்பினர் சுந்தரம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 1985 முதல் அதிமுக உறுப்பினராக இருந்து வருகிறேன். கடந்த 2016- ம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு, பிளவுபட்ட கட்சி மீண்டும் இணைந்து. அதன் பிறகு, 12.9. 2017 ல் நடந்த கட்சியின் பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் பொருளாளர் பதவியும் கட்சியின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யப்படவில்லை.

பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து விட்டு, பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். உறுப்பினர்களின் பரிந்துரை இல்லாமல் விதிகளுக்கு மாறாக இவர்கள் இருவரும் நியமிக்கப்பட்டனர். கடந்த 2018- ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையத்திடம் 2019ம் ஆண்டு இறுதிக்குள் உட்கட்சி தேர்தலை நடத்தி முடிப்பதாக கட்சி ஒருங்கிணைப்பாளர் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தேர்தல் நடத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மாறாக உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க வரும் 24ம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, உட்கட்சி தேர்தலை நடத்த கட்சியின் அவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும். பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவதில்லை. சின்னங்கள் தொடர்பான பிரச்சினை எழும்போது மட்டுமே தேர்தல் ஆணையம் தலையிடும் என்று விளக்கமளித்தார். தொடர்ந்து நீதிபதி, அரசியல் கட்சிக்கு உத்தரவிடக்கோரி ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது. இதுதொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் தான நிவாரணம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மனுதாரருக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து, மனுவை திரும்ப பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த நீதிபதி, திதும்பப் பெறப்பட்டதை அடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆதிகேசவலு உத்தரவிட்டார்.