தலைமை காவலர் மீது குப்பை லாரி மோதி சாவு டிரைவரை கைது செய்து போலீஸ் விசாரணை

சென்னை

சென்னை, நவ.21: மாநகராட்சி குப்பை லாரி மோதி போலீஸ்காரர் ஒருவர் பலியானார். இது தொடர்பாக லாரி ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலந்தூரில் உள்ள பரங்கிமலை போலீஸ்குடியிருப்பில் வசித்து வந்தவர் பழனிகுமார் (வயது 40). இவர் வியாசர்பாடி மற்றும் மகாகவிபாரதி நகர் ஆகிய காவல் நிலையங்களின் நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். நேற்றிரவு 11.45 மணியளவில் பணிநிமித்தமாக வியாசர்பாடி காவல் நிலையத்தில் இருந்து மகாகவி பாரதி நகர் காவல் நிலையத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். முல்லைநகர், சத்யமூர்த்தி நகர் மெயின்ரோடு சந்திப்பில் சென்ற போது சாலை பள்ளத்தில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

அப்போது கொடுங்கையூரில் இருந்து வியாசர்பாடி நோக்கி சென்ற சென்னை மாநகராட்சி அண்ணா நகர் மண்டலத்தை சேர்ந்த குப்பை லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்து பழனிகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக மாநகராட்சி குப்பை லாரி ஓட்டுனர் கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரான்சிஸ் (வயது 52) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த தலைமை காவலர் பழனிகுமாரின் சொந்த ஊர் மதுரை ஆகும். இவருக்கு விமலா என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.