கல்வி வளர்ச்சிக்காக ரூ.28,000 கோடி தேவை முன்னாள் மாணவர்கள் நிதி வழங்க அரசு வேண்டுகோள்

சென்னை

சென்னை, நவ.21: கல்வித்துறை வளர்ச்சிக்காக அரசு ரூ.28,757 கோடி ஒதுக்கீடு செய்து கல்விப்பணிகளை ஊக்குவித்து வருகிறது என்றும், பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்கள் நிதி வழங்க வேண்டும் என்று கல்வித்துறை வேண்டுகோள¢ விடுத்துள்ளது. கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மாணவர்களின் பள்ளிக்கல்வி இடைநிற்றலைத் தடுத்து சிறந்த கல்வியை வழங்குவதற்காக மாணவர்களுக்கு அரசு 14 வகையான பொருட்களை விலையில்லாமல் வழங்கியதால் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. அரசு 2019-20 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறையின் வளர்ச்சிக்காக ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு செய்து சாதனைப் படைத்து வருகிறது.

அரசு அதிக அளவில் நிதிகளை ஒதுக்கினாலும், இது என் பள்ளி, அதன் வளர்ச்சியில் நானும் பங்கெடுப்பதில் பெருமை கொள்கிறேன் என்ற எண்ணம் பள்ளியின் முன்னாள் மாணவர்களின் இதயத்தில் உருவானால் தான் அரசுப் பள்ளிகளின் தரத்தினை மேன்மேலும் உயர்த்தி அரசுப் பள்ளிகளை மெருகூட்டிட வழிவகை செய்திடும். இதன் தொடர்ச்சியாக, 5-11-2019 அன்று முதலமைச்சர் இதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளம் ஒன்றினை துவக்கி வைத்துள்ளார். எனவே, அரசுப்பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்களும், தற்போது தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும் தங்களது சமூகப் பொறுப்புணர்வு நிதி மூலம் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து, பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதி களை மேம்படுத்திட வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.