மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் சிரமத்தை தவிர்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது

சென்னை

சென்னை, நவ.21: உள்ளாட்சி அமைப்பில் மேயர் நகராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர்களை கவுன்சிலர்களே ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் நடத்துவதற்கு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. மறைமுக தேர்தலில் சிரமங்கள் ஏற்படுவதை தவிர்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. மக்களால் தேர்வு செய்யப்படும் வார்டு உறுப்பினர்கள் மேயர் உள்பட மூன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர்களைத் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்வதற்கான அவசர சட்ட திருத்த மசோதா பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, சட்டத் திருத்த மசோதாவது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. மறைமுகத் தேர்தல் எதற்காக கொண்டு வரப்படுகிறது என்பதை விளக்கி சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மாநகராட்சி மேயர் அல்லது நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும், உள்ளாட்சி அமைப்பின் பெரும்பான்மையான மன்ற உறுப்பினர்கள் வேறொரு கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை நடத்துவதில் பெரும் குழப்பங்கள் ஏற்படுவதுடன், மன்றத்தை சுமுகமாக நடத்திச் செல்வதிலும் பாதிப்பு உருவாகும்.

இதுபோன்ற தருணங்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் மன்றக் கூட்டங்களைக் கூட்டுவதில் கூட பெரும் சிரமங்கள் ஏற்படும். இதனால், உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென்ற அடிப்படை அம்சமே தகர்ந்து விடும். இதைக் கருத்தில் கொண்டே மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மறைமுகத் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட வேண்டுமென தமிழக அரசு கருதுகிறது. பெரும்பான்மையான உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களில் ஒருவர் மேயராகவும், மன்றத் தலைவராகவும் தேர்வு செய்யப்படும்போது மன்றத்தை நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் கூட்டுப் பொறுப்பு உருவாகும். மன்ற நடவடிக்கைகள் முதல், முடிவுகளை எடுப்பது வரையில் சுமுகமான சூழலும், தீர்க்கமான வழியும் உருவாகும்.

அதிகளவு மன்ற உறுப்பினர்கள்: சென்னையில் 200 மன்ற உறுப்பினர்களும், மதுரை, கோவை மாநகராட்சிகளில் தலா 100 உறுப்பினர்களும் உள்ளனர். இதுபோன்ற உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பான்மையாக உள்ள மன்ற உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பு என்பது தவிர்க்க முடியாததாகும். மேலும், மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர் மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தலுக்குப் பதிலாக மறைமுகத் தேர்தல் நடத்துவதே சிறந்ததாக இருக்கும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.