வாடகை எந்திர மையங்களுக்கு சலுகை ரூ.10 லட்சம் வரை மானியம் : அரசு அறிவிப்பு

சென்னை

சென்னை, நவ.21: வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வட்டார அளவில் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைப்பதற்கு அரசு ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது வருமாறு:- சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை குறைந்த மற்றும் கருவிகளை சொந்தமாக வாங்கி பயன்படுத்த இயலாததை கருத்தில் கொண்டு, அவற்றை குறைந்த வாடகையில் பெற்று வேளாண் பணிகளை காலத்தே மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் வட்டார அளவிலான ஒரு வாடகை மையம் அமைத்திட 40 சதவிகித மானியம் என்ற அடிப்படையில் அதிக பட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இம்மையம் வட்டார அளவில் அமைக்கப்படுவதால் விவசாய பணிகளுக்கு தேவைப்படும் பல்வேறு வகையான வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மற்றும் சிறு வேளாண் உபகரணங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு கிடைக்கும். அதன் மூலம் சாகுபடிப் பணிகளை உரிய நேரத்தில் மேற்கொண்டு, விவசாயிகள் நல்ல மகசூல் பெற முடியும். இவ்வாறான மையங்களை அமைத்திட முன்னோடி விவசாயிகள், விவசாய சுய உதவி குழுக்கள் மற்றும் தொழில்முனைவோர் முன்வரலாம்.

இத்திட்டத்தின் கீழ், பயன்பெற விரும்புபவர்கள், முதலில் அதற்குரிய விண்ணப்பத்தினை தங்களது வருவாய் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் அளித்திட வேண்டும். இவ்வாறான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்க விரும்புவோர் உடனடியாக தங்களது பகுதியில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் வருவாய் கோட்ட உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தையோ அல்லது மாவட்ட அளவிலான செயற் பொறியாளர் அலுவலகத்தையோ அணுகி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு, கீழ்க்காணும் முகவரியினை தொடர்பு கொண்டு பயனடையுமாறு வேளாண் பெருமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, எண்.487, அண்ணா சாலை, நந்தனம், சென்னை – 600 035. தொலைபேசி எண்கள்: 044-29515322, 044-29510822, 044-29510922