சிறுவணிகரும் பயன்பெற எளிய சட்டம் இயற்றுக மத்திய அரசுக்கு விக்கிரம ராஜா கோரிக்கை

சென்னை

சென்னை,நவ. 21: ஆலப்புழாவில் நடந்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செயற்குழு கூட்டத்தில் சிறு வணிகர்களும் வணிகம் செய்ய எளிமையான சூழ்நிலையை ஏற்படுத்திட சட்ட மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என விக்கிரம ராஜா கோரிக்கை விடுத்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செயற்குழு கூட்டம் ஆலப்புழாவில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தொடர்ந்து அளித்து வந்த பல்வேறு கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்த்து, ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தீர்வுகள் எட்டப்பட்டு, ஜி.எஸ்.டி வரி குறைப்பும், விதிகளில் சில மாற்றங் களும் செய்யப்பட்டு இருப்பதை வரவேற்று, பேரமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

அமேசான், பிளிப்கார்ட் மற்றும் மண்டி போன்ற ஆன்லைன் வர்த்தகங்களால் சிறு-குறு வணிகம் பாதிப்படைவது மட்டுமல்லாமல், பரவலான பணப்புழக்கத்தை முற்றிலும் தடுத்து ஒட்டுமொத்த நிகர லாபமும் ஒரே இடத்தில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதனால் சிறு வணிகம் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடும் நிலை ஏற்படும். ஜி.எஸ்.டியில் வணிகர்களுக்கு பாதகமான சூழ்நிலைகளை மாற்றி, கார்ப்பரேட் வணிகர்களுக்கு மட்டுமல்லாமல் சிறு வணிகர்களும் வணிகம் செய்ய எளிமையான சூழ்நிலையை ஏற்படுத்திட சட்ட மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவரவேண்டும்.

மத்திய அரசு அறிவித்துள்ள வணிகர் நலவாரியம் விரைவாக அமைக்கப்பட்டு, அதற்கு நியமன உறுப்பினர்களை உடனடியாக மத்தியஅரசு நியமிக்க வேண்டும் இவ்வாரியத்தில் வணிக அமைப்பைச் சார்ந்தவர்கள் உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும் .
வருகின்ற மே-5, 37வது வணிகர் தின மாநில மாநாட்டை தஞ்சை மண்டலத்திற்கு உட்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் நடத்துவது என்று ஏகமனதாக இச்செயற்குழு கூட்டம் தீர்மானிக்கிறது.