சென்னை, நவ.22: கோவில் இடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. சட்ட விரோதமாக, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், அதை ரத்து செய்யக்கோரி ராதாகிருஷ்ணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆட்சேபமில்லாத அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபணைக்குரிய புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு அதிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். கோவில் நிலங்களை பொறுத்தவரை மாவட்டம் வாரியாக, கோவில் வாரியாக கருத்துருக்கள் வகுக்கப்பட்டு, அறநிலையத்துறை ஆணையர் மூலமாக அரசுக்கு அனுப்பி, அதன் பிறகே முடிவெடுக்கப்படும்.

கோவிலுக்கு தேவைப்படாத நிலங்களை ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்தும் அந்த நிலத்துக்கான விலையை கோவிலுக்கு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஏழை மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தும் நலத்திட்டத்திற்கான இந்த அரசாணை மத உணர்வுகளுக்கோ, பக்தர்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி ஆகியோர் கொண்ட பெஞ்சில் சென்றமுறை விசாரணைக்கு வந்தபோது, அரசு பிறப்பித்த அரசாணை ஒரு மதத்திற்கான வழிப்பாட்டு தலங்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? மற்ற மத வழிப்பாட்டு தலங்களுக்கு கிடையாதா? இந்த அரசாணை மூலம் கோவில் நிலங்களை விற்க அறநிலையத் துறையை அரசு வற்புறுத்துகிறதா?
இந்த அரசாணை எப்படி கோவில்களுக்கு பலனை அளிக்கும்? இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அரசுக்கு ஊதுகுழலாகவும், ரிமோர்ட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் பொம்மைகளாகவும் தான் இருக்கிறார்கள்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 ஆயிரம் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு? அதில் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் தொடர்பான விவரங்கள் இல்லாமல் அரசாணையை அமல்படுத்த முடியாது என கருத்து தெரிவித்தனர்.
பின்னர், அரசாணைக்கு தடை கோரிய மனு மீது, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்ட இவ்வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினார். அதில், கோவில் நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் தமிழக அரசு அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.