பகல்-இரவு டெஸ்ட்: இந்திய அணி பந்து வீச்சு ஷேக் ஹசீனா – மம்தா இணைந்து வீரர்களை அறிமுகப்படுத்தி துவக்கி வைத்தனர்

TOP-5 முக்கிய செய்தி விளையாட்டு

கொல்கத்தா, நவ.22: அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்தியா-வங்கதேச கிரிக்கெட் அணிகள் தங்களது முதல் பகல்-இரவு டெஸ்ட்டில் களம்கண்டன. தொடக்கவிழாவில் பங்கேற்ற வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இணைந்து இரு அணி வீரர்களையும் அறிமுகப்படுத்தியதும், போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியாவுக்கு வந்துள்ள வங்கதேச அணி டி20 போட்டிகளில் விளையாடி 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதனைத் தொடர்ந்து நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா-வங்கதேசம் அணிகள் இடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மதியம் 1 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் இந்திய அணி தனது சொந்த மண்ணில் முதன் முறையாக பகல்-இரவு ஆட்டமாக ‘பிங்க்’ நிற பந்தில் விளையாடுவதால், கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

நட்சத்திரங்களின் சங்கமம்:
வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் போட்டியை நேரில் கண்டு ரசிப்பதற்காக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹாசன் ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதுபோக பிற விளையாட்டு நட்சத்திரங்களான பி.வி.சிந்து, விஸ்வநாதன் ஆனந்த், சானியா மிர்ஸா ஆகியோரும் நேரில் வந்து போட்டியை கண்டுகளிக்கின்றனர்.

இந்தியா பவுலிங்:
நட்சத்திர பட்டாளங்கள் பங்கேற்ற இந்த போட்டியின் தொடக்க விழாவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இணைந்து பங்கேற்று இரு அணி வீரர்களையும் அறிமுகம் செய்துவைத்து வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, டாஸ் போடப்பட்டது. வங்கதேச அணி டாஸ் ஜெயித்து முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய வீரர்கள் பீல்டிங் செய்துவருகின்றனர்.

ஆஸ்திரேலியாவே அதிகம்:
2015-ம் ஆண்டில் இருந்து இதுவரை 11 பகல்-இரவு டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. அனைத்து போட்டியிலும் முடிவு கிடைத்துள்ளது. பகல்-இரவு டெஸ்ட் அரங்கேறும் 7-வது நாடு இந்தியாவாகும். இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் நடைபெற்று அவை அனைத்திலுமே ஆஸ்திரேலிய அணியே வென்றுள்ளது. இந்தியா, வங்கதேசம் இன்று களம் காணும் போது, பகல்-இரவு டெஸ்டில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயரும்.