டிசம்பர் 7-ல் தர்பார் பட இசை வெளியீடு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ளார்

TOP-6 சினிமா சென்னை

சென்னை, நவ.22: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தில் இசை வெளியிட்டு விழா டிசம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக படத்தின் முதல் பாடலை வரும் 24-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ’தர்பார்’ படத்தின் புரமோஷன் பணிகளையும் தொடங்க படக்குழுவினர் முடிவு செய்து விட்டனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்ளரங்கில் வரும் டிசம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இசை வெளியீட்டுக்கு முன்பாகவே ’தர்பார்’ படத்தின் இரண்டு பாடல்களை சிங்கிள் பாடலாக வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முதல் பாடல் நவம்பர் 24-ம் தேதியும் இரண்டாம் பாடல் டிசம்பர் 1-ம் தேதியும் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் டிசம்பர் 7-ம் தேதிக்கு பிறகு தொடர்ச்சியாக இந்த படத்தின் புரமோஷன் பணிகள் இருக்கும் என்றும் அதிசயமாக இந்த படத்தை ஒருசில புரமோஷன் நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சூப்பர் ஸ்டாரின் பிறந்த தினமான டிசம்பர் 12-ம் தேதி அன்று படத்தின் டீசரை வெளியிட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டப்பிங் பணிகளை ரஜினி முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.