ரஜினி கூறிய அற்புதம் அதிமுக ஆட்சியே தூத்துக்குடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை

சென்னை, நவ.22: 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இதையே அற்புதம் நடக்கும் என்றும் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோவாவில் இருந்து நேற்று சென்னை திரும்பிய போது விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், 2021-ல் தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை நிகழ்த்துவார்கள் என்று கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி: 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் என்று ரஜினிகாந்த் கூறி உள்ளார். அது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: 2021-ம் ஆண்டை பொறுத்தவரை அ.தி.மு.க. ஆட்சிதான் மலரும் என்ற அதிசயத்தை அவர் கூறி இருப்பார் என்று கருதுகிறேன்.

கேள்வி: கமலும், ரஜினிகாந்தும் இணைந்து தேர்தலை சந்திக்கப்போவதாக கூறி இருக்கிறார்களே?
பதில்: நான் ஏற்கனவே பலமுறை கூறி உள்ளேன். ரஜினிகாந்த் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. கட்சி ஆரம்பிக்கட்டும், அப்போது கருத்துகளை தெரிவிக்கிறேன்.

கேள்வி: உள்ளாட்சி தேர்தலில் பிஜேபி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடுவதாக கூறி இருக்கிறார்கள். பிஜேபி கூட்டணி தொடருமா?
பதில்: தற்போது நாடாளுமன்ற தேர்தலில் வைக்கப்பட்ட கூட்டணி தொடருகிறது.

கேள்வி: 2021 சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளராக உங்களை முன்னிறுத்தி பிரசாரம் இருக்குமா?
பதில்: இன்னும் தேர்தலே அறிவிக்கவில்லை. ஆனால் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் 2021-ம் ஆண்டு முதலமைச்சராக வருவார்.

கேள்வி: உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்: உள்ளாட்சி தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.