ரூ.387 கோடியில் முக்கொம்பு கதவணை கட்டும் பணி மதிப்பீட்டுக்குழு தலைவர் தோப்பு வெங்கடாசலம் பேட்டி

தமிழ்நாடு

திருச்சி, நவ.22: திருச்சி முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் புதிய கதவணை கட்டும் பணியானது 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என்றுதமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமையில் செல்வராசு, ராஜேந்திரன், கருணாநிதி, காளிமுத்து, சரவணன், நடராஜன் உள்ளிட்ட 9 உறுப்பினர்கள் அடங்கிய குழு மற்றும் சட்டமன்ற குழு செயலாளர் சீனிவாசன் ஆகியோர் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த பணிகளை ஆய்வு செய்தனர். அவர்களுடன் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசுவும் சென்றிருந்தார்.

நேற்று மதியம் 12.45 மணிக்கும் காவிரி-கொள்ளிடம் ஆறுகள் பிரியும் இடமான முக்கொம்பு மேலணைக்கு சென்றனர். அங்கு கடந்த ஆண்டு (2018) இடிந்து விழுந்த கொள்ளிடம் கதவணை கட்டும் பணி எந்த நிலையில் உள்ளது என்றும், பணிகளை துரிதமாக முடிக்கவும் குழுவினர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் பணிகளின் நிலை குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்(ஆற்றுப்பாசனம்) பாஸ்கர், அக்குழுவினருக்கு விளக்கி கூறினார்.

அப்போது அவர் கூறியதாவது: முக்கொம்பு மேலணையில் உள்ள கொள்ளிடம் கதவணை 150 ஆண்டு கால பழமையானது. அதன் உறுதித்தன்மை இழந்து கடந்த ஆண்டு இடிந்து விட்டது. தற்போது கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.387 கோடி மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டும் பணி தொடங்கப்பட்டு 8 மாதங்கள் ஆகிவிட்டது. இந்த பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளப்பட்டு, வருகிற 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் புதிய கதவணை கட்டுமான பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.