காஞ்சிபுரம், நவ.23: நசரத்பேட்டையில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் சார்பில் குழந்தை உரிமைகள் தின விழா கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் நசரத்பேட்டையில் இயங்கி வரும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பாக களியனூரில் உள்ள அகாடமியில் பள்ளி செல்லா, பள்ளி இடைநின்ற, குழந்தைத் தொழிலாளர் முறையிலிருந்து விடுவிக்கப்பட்ட குழந்தைகளுக்காக குழந்தைகள் உரிமைகள் தின விழா கொண்டாடப்பட்டது. ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிர்வாக அறங்காவலர் முனைவர் கல்பனா சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பொன்.ராம் முன்னிலை வகித்தார். குழந்தைகள் உரிமைகளுக்கான கொள்கை வரைவு திட்டத்தை ஓய்வு பெற்ற மத்திய புலனாய்வுத் துறை இயக்குனர் கார்த்திகேயன் வெளியிட, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன் பெற்றுக் கொண்டார்.

மேலும் சமூகத்தில் தன்னலம் பாராமல் குழந்தைகள் நலனுக்காக பணியாற்றிய 25 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு “மாற்றம் தந்த மாமனிதர்” விருதினை ஓய்வு பெற்ற மத்திய புலனாய்வுத் துறை இயக்குனர் கார்த்திகேயன் வழங்கினார். மேலும் அவர் பேசுகையில், குழந்தைகளின் உரிமைகள், உயிர்வாழும் உரிமை, வளர்ச்சி உரிமை, பாதுகாப்பு மற்றும் பங்கேற்பு உரிமை குறித்தும், குழந்தைகளுக்காக அரசு மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சலுகைகள் குறித்தும், குழந்தைகளின் உரிமைகளை பொறுத்தவரை பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் மட்டுமல்லாமல், சமூகத்தில் உள்ள சமுதாய நலன் சார்ந்தவர்களும், ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் இதில் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றனர். இன்றைய குழந்தைகள் மிகுந்த புத்திசாலிகளாகவும், கல்வியில் மிகுந்த ஆர்வமுடையவர்களாகவும் தனித்திறமைகளை வெளிக் கொணரும் விதத்தில் முன்னேறி வருகின்றனர் என்ற கூறினார்.