சென்னை, நவ.23: சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக கிழக்கு கடற்கரை சாலையில் 7.3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவு முதல் காலை வரை வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், பாரிமுனை, சேப்பாக்கம், அடையாறு, நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது,சென்னையில் விடிய விடிய மழை பெய்தது. குறிப்பாக திருவான்மியூர், சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.

சென்னையில் இன்று தொடர்ந்து மழை பெய்த நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் மிக அதிகபட்சமாக 7.3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சென்னை நகரை நோக்கி மேக கூட்டங்கள் படையெடுத்து வருவதாகவும், இதனால் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு இந்த மழை நீடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். பிரதிப் ஜான் தனது வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ள செய்தியில், மேலடுக்கு சுழற்சி வரும் நாட்களில் கிழக்கு நோக்கி நகரும் என்பதால் நவம்பர் கடைசியிலும், டிசம்பர் முதல் வாரத்திலும் மழை தீவிரமடையும் என்று தெரிவித்துள்ளார். அடுத்த வாரத்தில் பெய்ய இருக்கும் கனமழை காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் உயரும் என வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை இதுவரை 40 சதவிகிதம் பற்றாக்குறையாகவே உள்ளது. நவம்பர் கடைசியில் மழை தீவிரமடையும் என்று தனியார் வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.