மும்பை, நவ. 23: பிஜேபி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து என்சிபி சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து அஜித்பவாரை நீக்கி, சரத்பவார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், சிவசேனை, காங்கிரஸ், என்சிபி கூட்டணி தொடர்கிறது என்றும், தங்களிடம் பெரும்பான்மை பலம் இருக்கிறது என்றும் கூறினார். இந்நிலையில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று பிஜேபியும் உறுதி அளித்துள்ளது. மகாராஷ்டிராவில் பிஜேபி-தேசியவாத கூட்டணி ஆட்சி பதவியேற்றது குறித்து, பிஜேபி மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியதாவது:- மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பிஜேபி-சிவசேனா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தனர். எங்கள் கூட்டணிக்கு 161 எம்எல்ஏக்கள் கிடைத்தனர்.

ஆனால், மக்கள் தீர்ப்புக்கு எதிராக சிவசேனா நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது. முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்தே, அவர்கள் மாற்று வழிகளைப் பற்றி பேசத் தொடங்கிவிட்டார்கள். சஞ்சய் ரவுத் இப்போது சற்று அமைதியாக இருக்க வேண்டும். அவர் சிவசேனாவை அழித்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே தனது உறவினர் அஜித் பவாரை கட்சியின் சட்டமன்ற தலைவர் பதவியில் இருந்து நீக்கி சரத்பவார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அஜித்தை ஆதரிக்கும் எம்எல்ஏக்களையும் கட்சியிலிருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இது குறித்து இன்று மதியம் 12 மணிக்கு மும்பையில் சரத்பவாரும், உத்தவ் தாக்கரேயும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர், ‘அப்போது பவார் கூறுகையில், காலை 6 மணிக்கு பிறகு தான் எனக்கு அரசியல் நிலவரம் தெரிய வந்தது. அஜித்பவாருடன் 10 அல்லது 11 என்சிபி எம்எல்ஏக்கள் மட்டுமே கவர்னர¢மாளிகைக்கு சென்றுள்ளனர்.

ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இன்னும் எங்களிடம் உள்ளது. அஜித்பவார் எடுத்த முடிவை நாங்கள் ஏற்க மாட்டோம். கட்சித்தாவல் தடை சட்டம் பயனற்றதாக இருக்கிறது. பிஜேபியை ஆதரிக்கும் எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டம் பாயவேண்டும். அவர்களை பதவிநீக்கம் செய்வோம் என்றார். மும்பையில் இன்று காலை பதட்டமான சூழ்நிலை உருவாகியதால் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அலுவலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது,
அஜித் பவாரை கண்டிதது தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.