சென்னை, நவ. 23: சென்னை கொத்தவால்சாவடியில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பதுக்கி விற்பனை செய்த வடமாநில ஆசாமியை போலீசார் கைது செய்து, அவனிடமிருந்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள அபின் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் அபின் என்ற போதைப்பொருள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி கொத்தவால் சாவடி போலீசார் அந்தபகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது கொத்தவால்சாவடி சின்னதம்பி தெருவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்த போது அங்கு அதிக விலையுடைய போதைப்பொருளான அபின் பாக்கெட்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் அந்த பாக்கெட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் (வயது27) என்பவரிடம் நடத்திய விசாரணையில் ராஜஸ்தானைச்சேர்ந்தவன் என்பதும் வேலை தேடி சென்னைக்கு வந்ததாகவும் வேலை கிடைக்காமல் இங்கு தங்கியுள்ளதாகவும் ராஜஸ்தானிலிருந்து அபினை வாங்கி வந்து சென்னையில் அதிக விலைக்கு விற்பதாகவும் கூறினார்.

இதுகுறித்து போலீசார் அவனை கைது செய்து வழக்குப்பதிவுசெய்து சென்னைக்கு வேலை தேடி வருபவன் பல லட்சம் மதிப்புள்ள அபின் என்ற போதைப்பொருளை எப்படி வாங்கி வந்திருப்பான் என்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலுக்கும் இவனுக்கும் தொடர்புள்ளதா என்றும், வேறு எந்தெந்த இடங்களில் விற்பனை செய்துள்ளான் என்றும் ராஜஸ்தானில் இவனுக்கு போதை பொருளை கொடுத்து விற்பனை செய்யச்சொன்னது யார் என்றும் பல்வேறு கோணங்களில் வழக்குப்பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 150 அபின் பாக்கெட்களின் விலை பல லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.