சென்னை: 16 பேருந்து நிலையங்கள் சீரமைப்பு

சென்னை

சென்னை, நவ.23: சென்னையில் திருவான்மியூர், அண்ணாநகர், ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் ரூ. 50 கோடி செலவில் புனரமைக்கப்பட உள்ளன. இது தொடர்பாக போக்குவரத்து துறை செயலாளர் டி.சந்திரமோகன் தலைமையில்¢ நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் டெப்போ மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ஏற்கனவே 11 டெப்போக்களை நவீனப்படுத்தும் திட்டத்தை துரிதப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அண்ணா நகர், ஐயப்பன் தாங்கல், வடபழனி, திருவான்மியூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களை புனரமைப்பு செய்வதற்காக ரூ.50 கோடி அரசு நிதி ஒதுக்கி இருப்பது குறித்தும் இவற்றை பயன்படுத்தி விரைவில் சீரமைப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

வடபழனி பேருந்து நிலையத்தில் சுவர் இடிந்து போக்குவரத்து ஊழியர் இறந்த சம்பவத்திற்கு பிறகு மாநில அளவில் 320 டெப்போக்களில் ஆய்வு பணி நடத்தப்பட்டுள்ளது. திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் சாதாரண மழை பெய்தாலே தண்ணீர் தேங்குவது குறித்தும் இடிபாடுகள் ஏற்பட்டிருப்பது குறித்தும் அரசின் கவனத்தை தொழிற்சங்கங்கள் ஈர்த்துள்ளன. சென்னையில் மட்டும் 16 முக்கிய பேருந்து நிலையங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது.