திருச்சி, நவ.23: திருச்சி ஏ.டி.எம். எந்திரத்தில் ஆட்டோ டிரைவர் விட்டுச்சென்ற ரூ.10 ஆயிரத்தை தையல் தொழிலாளி எடுத்து போலீசில் ஒப்படைத்த நேர்மைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூரை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(வயது32). இவர், திருச்சி பாலக்கரையில் தையல் கடை நடத்தி வருகிறார். நவநீதகிருஷ்ணன், திருச்சி வங்கி கிளை ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பணம் எடுக்க சென்றார். ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க நவநீதகிருஷ்ணன் கார்டை சொருக முயன்றபோது, அங்கு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் வெளியே வரும் இடத்தில் ரூ.10 ஆயிரம் கேட்பாரற்று கிடந்தது. உடனே அந்த பணத்தையும் எடுத்து கொண்டு, பின்னர், திருச்சி மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நவநீதகிருஷ்ணன் தகவல் தெரிவித்தார்.

உடனடியாக நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வந்து போலீசாரிடம் நவநீதகிருஷ்ணன் அந்த பணத்தை ஒப்படைத்தார். அந்த பணம் யாருடையது என்று அங்கு போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர். அந்தவேளையில் அங்கு வந்த ஆட்டோ டிரைவர் சார்லஸ் ஹென்றி என்றும், ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டை போட்டு ரூ.10 ஆயிரம் எடுக்க முயன்றேன். ஆனால், பணம் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. எனவே, பணம் ஏ.டி.எம். எந்திரத்தில் இல்லை என்று நினைத்துக்கொண்டு சென்று விட்டேன். உடனடியாக அருகில் உள்ள வேறு எந்திரத்தில் பணம் எடுக்க சென்ற போது, ரூ.10 ஆயிரம் எடுக்கப்பட்டு விட்டதாக செல்போனில் குறுந்தகவல் வந்தது. உடனே திரும்பி வந்து விட்டேன்என்றார். பின்னர் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விட்டு.ஆட்டோ டிரைவரிடம் பணத்தை ஒப்படைத்தனர். அதே வேளையில் நேர்மையாக ரூ.10 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த தையல் தொழிலாளியை போலீசாரும் வங்கி அதிகாரிகளும் பாராட்டினர்.